கண்ணா..

Saturday, April 3, 2010


தினம் தினம்
காலையில்
கண் விழிக்கிறேன்..
வராத கனவில்
நீ வந்ததை
நினைத்துக் கொண்டு!

அவசரமாகக்
கிளம்பி
அலுவலகம் செல்கிறேன்..
முன்னிரவில்
நாம் கொண்ட
முரண்களை
எண்ணிக் கொண்டு!

நூறாவது தடவையாக
என்
கைபேசியைப்
பார்க்கிறேன்..
"மதி கெட்டவளே..
மதிய இடைவேளை
மணி 'ஒன்று'க்குத் தான்"
என்று
மெளனமாக அது
முனகிய போதும்..!

மணிக்கணக்கில்
பேசி
முடித்ததும் தான்
மணியைப் பார்க்கிறேன்..
இன்னும் சிலநிமிடம்
பேசி இருக்கலாமோ என்று!

பாரதியையும் ஷெல்லியையும்
பாராமல் படிக்கிறேன்..
எப்பொழுதும்
அவை பற்றியே
நீ பேசுகிறாய் என்று!

வேண்டுமென்றே சீண்டும்
உன்னிடம்
செல்லமாகச்
சினுங்குகின்றேன்..
என்னைக் கேலி பேசும்
தோழியை
அருகில் வைத்துக் கொண்டு!

இதோ..
இன்று..
நமக்குள் ஏதோ சிறு ஊடல்..

நீ சென்றுவிட்டாய்
என்னை
உறங்கச் சொல்லிவிட்டு..
அமைதியாக..

..என் ஜன்னலில்
வெண்ணிலா..
அருகினில்
அருந்தாமல் ஆறிவிட்ட
ஆவின் பால்..
கையினில்
காகிதம்..
கவிதை
எழுதுவதற்காய்..
உன் பெயரை மட்டுமே
கிறுக்கத் தெரிந்த
பேனாவோடு..

ஆனால்..

என்
உடலிற்கும்
உள்ளத்திற்கும்
'உறங்க விடா'
உடன்படிக்கை..

'உம்மா' தராமல்..
என்னை
உறங்கசொல்லிச்
சென்று விட்ட
உன்னை எண்ணி..

உடல்
விரதத்தில்..
உள்ளமோ...
விரகத்தில்!!
Powered by Blogger.