மௌனமான நேரம் - முல்லை

Saturday, August 28, 2010


தனிமையின்
இனிமையைத் தேடித்
தவமிருக்கும் தருணம் இது

அடர்ந்த இக்காட்டில்
அனாதையாக வாழவே
இசைகிறது மனது..

சேர்த்து வைத்த
சிந்தனை முத்துக்களால்.. நீ
வார்த்து வைத்த மனக்குழிகளில்
பல்லாங்குழி ஆடிப்பார்க்கிறேன்
கழியுமா பொழுது என்று!

சூடிவைத்த முல்லைப்பூ கூட
வாடாமல் வதைக்கின்றது

புள்ளிமான்களின் கொள்ளை வண்ணங்களும்
வெள்ளை முயல்களின் துள்ளல் ஓட்டங்களும்
கொன்றை மரங்களின் தங்க மலர்களும்
மரங்கொத்திப் பறவையின் மரம் கொத்தும் அழகும்கூட

சலனப்பட்ட
இந்தச் சஞ்சல மனதை
சாந்தப்படுத்துவதற்குச்
சாத்தியமே இல்லை..

கார்காலத்துக் கருமேகம் கூட
என் தாகத்தைத்
தணிப்பதற்கு இல்லை..

முல்லையாழ் எடுத்து
முல்லைப்பண் இசைத்து
மறக்க முயல்கிறேன்
மங்காத
உன் நினைவுகளை..

முடியாமல் போகவே
மாயோனை எண்ணி
மன்றாடி வேண்டுகிறேன்
மாயமாகிப் போன
என் மணவாளன்
நீ
மனமிரங்கி
மறுதரம்
என் கரம் பிடிப்பாயென!
*
*

மௌனமான நேரம் - குறிஞ்சி

Tuesday, August 17, 2010

அரவமில்லாத இந்த
அர்த்த ராத்திரி
உன் அரவணைப்பில்லாமல்
அர்த்தமற்றதாய்..

குறிஞ்சியின் குளிரிலும்
கொதிக்கும் என்
மனதை
எதைக் கொண்டு ஆற்றுவேன்
உன் குரலைத் தவிர

ஓசையில்லாத
இந்நிசப்த வேளையில்
என் மனதைக் கசக்கும்
வலிகள் முழுதும்
கசிகின்றன
விசும்பல்களாய்..

உச்சி முகர்ந்து உன்னை
முத்தமிட்ட
உதடுகள் இரண்டும்
உயிரற்று
உலர்ந்தனவாய்..

தாகம் எடுப்பினும்
தண்ணீரை மறுக்கிறேன்
காதல் கணப்பதால்
கண்ணீரைச் சுமக்கிறேன்

பாலுண்ண பசித்து வரும்
பச்சிளம் குழந்தையைப்
புறந்தள்ளும்
தாய்ப் போலத்
தள்ளுகிறாய் என்னை
உயிரோடுக்
கொள்ளுகிறாய்ப் பெண்ணை!

குறிகூறும் குறத்தியும்
அறிந்து சொன்னாள்
என் மனம்
பறிபோன செய்தியை..

உன் கரங்கள் தரும்
கதகதப்பில்
நான் கண்ணுறங்கிப்
போவது
கனவில் மட்டுமே..
Powered by Blogger.