அரிதாகப் பூக்கும்
குறிஞ்சிப்பூப் போல
அரிதாரம் பூசாத
நட்'பூ'
நமதென்றேன்
"அவதூறு!" என்றாய் நீ
ஆணுக்கும் பெண்ணுக்கும்
ஓர் அன்பு என்றாலே
அது
'காதல்' என்றாய்!
அறியாப் பெண் போல
நானும்
"ஆமாம்" என்றேன்
அறிந்தும் கூட..
கண்கள் கலந்தன
இதயங்கள்
பிண்ணிக் கொண்டன
மூச்சுமுட்டும் மட்டும்..
எங்கெங்கோ ஜனித்த
நம்
ஒவ்வொரு ரசனையும்
ஒரே அலைவரிசையில்!!
"அதிசயம்" என்றோம்
ஆர்ப்பரித்துக் கொண்டோம்
"கல்யாணம்..?" என்றாய்
காத்திருக்கக் கேட்டேன்
அப்படியே செய்தாய்..
காலம் கடந்தது
உன்
காதலை எதுவோ
கலப்படம் செய்தது..
"வா" என்றாய்
மறுபடியும்..
பொறுப்புகள் எல்லாம்
நெருக்கிப் பிடித்திருந்த
என்
இதயக்கூட்டைச் சற்று
நகர்த்திப் பார்த்தேன்
நொறுங்கிப் போனது!
"நான் வரவில்லை..."
என்றேன்
"போகிறேன்" என்றாய்..
தடுக்கவில்லை நான்..
இருவர் உணர்வுகளும்
ஒன்றாய்ச் சங்கமித்த
காதல் கடலில்
துடுப்பைத் தவறவிட்ட
ஓடமாய்..
தத்தளிக்கிறேன் தனியாக..
நீ போன
திசையை
வணங்கிவிட்டு
உன்னை
வாழ்த்திவிட்டு..
முகத்தைத் திருப்பி
உடைந்து போன
என் இதயத்தைச் சற்று
உற்றுப் பார்த்தேன்..
உள்ளே..
நம் இதயப் பிணைப்பால்
பிரசவம் ஆகியிருந்த
அந்தக்
'காதல் குழந்தை' மட்டும்
சேதாரம் எதுவுமின்றிச்
சிரித்துக் கொண்டிருந்தது..
அள்ளி எடுத்து
அணைத்துக் கொண்டேன்..
"என்னவன்" நீ
எனக்கு அளித்த
முதலும் கடைசியுமான
முத்துப் பரிசை!!